நாவலப்பிட்டி, தொலஸ்பாகை – செம்ரோக் பகுதியில் இன்று பெய்த பலத்த மழை காரணமாகப் பாரிய மரம் ஒன்று முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளது.
இதனால் அப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து வீதியில் விழுந்த மரத்தை அகற்றி, போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தொடர்ந்து சாலை ஓரங்களில் உள்ள பாரிய மரங்கள் முறிந்து விழுந்து வருவதால் மத்திய மலைநாட்டில் கண்டி நுவரெலியா மாவட்டத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த மாதம் நாவலப்பிட்டி பகுதியில் இதே போன்ற சம்பவம் இடம்பெற்ற நிலையில் முச்சக்கர வண்டியில் வைத்திய சாலைக்கு சென்றவர்கள் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதி அபிவிருத்தி அமைச்சர் முன் வந்து இவ்வாறான துயர சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்
