நானுஓயா கெல்சி தோட்டத்திற்கு வீதி வசதி இன்றி 750 குடும்பங்கள் அவதிக்குளளாகி வருகின்றனர்.
நானுஓயாவிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில், பெரகும்புரா 476/B கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கெல்சி கெல்சி தோட்டத்தில், சுமார் 750 குடும்பங்கள் வாழ்கின்றன. 370 இற்கும் மேற்பட்ட சிறுவர்களும் 150இற்கும் மேற்பட்ட முதியவர்களும் வாழ்கின்றனர்.
எனினும், இத்தனை குடும்பங்கள் வாழும் இந்தப் பகுதிக்கு இதுவரை முறையான வீதி வசதி ஏற்படுத்தித் தரப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



வாகனம் செல்ல முடியாத நிலை:
மழை பெய்தால் பாதைகள் சேறும் சகதியுமாக மாறும் நிலை
மண் சரிவும் கற்கள் சரிந்து விழும் அபாயம்
பள்ளி செல்லும் சிறுவர்கள் தினமும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை
தரம் 5இற்கு மேற்பட்ட மாணவர்கள் நானுஓயா–நுவரேலியா டெஸ்ட் போர்ட் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், வாகனம் செல்ல முடியாத காரணத்தால், அவர்கள் தினமும் இந்த ஆபத்தான பாதையை நடந்து செல்ல வேண்டியுள்ளது.
ஒருபுறம் தேயிலைத் தோட்டங்களில் உழைக்கும் மக்கள்!
மறுபுறம் கல்விக்காக போராடும் பிள்ளைகள்
இன்னொரு புறம் சிகிச்சைக்காகப் போராடும் நோயாளிகள்.
மழைக்காலத்தில் ஒரு பாதை பாதிப்புக்குள்ளாவது என்பது வெறும் போக்குவரத்து பிரச்சினை அன்று. அஃது ஒரு குழந்தையின் கல்வியையும் ஒரு நோயாளியின் உயிரையும் ஒரு கர்ப்பிணித் தாயின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடிய விடயம்.
இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேர். மேலும் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவர் மஞ்சுள சுரவீர ஆராச்சி,கிருஷ்ணன் கலைச்செல்வி,கல்வி ராஜாங்க அமைச்சர், இன்னும் இருவர். அது மட்டும் அல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
எனவே, நுவரேலியா மாவட்ட அரசாங்க அதிகாரிகள், பிரதேச செயலகம், உள்ளூராட்சி நிர்வாகம், அரசியல் பிரதிநிதிகள்,சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த மக்களின் நீண்டகால பிரச்சினையை நேரில் பார்வையிட்டு, வாகனம் செல்லக்கூடிய முறையான வீதி வசதியை ஏற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மிக வினயமாக இங்குள்ள மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள், கௌசல்யா
