கடந்த 74 ஆண்டு கால தமிழகத் தோ்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) பிறகு நடைபெற்ற முதல் தோ்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழா் கட்சி, விஜய்யின் தவெக ஆகிய நான்கு முனைப் போட்டி நிலவியது. 4,023 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்புப் பணிகளில் 83,875 காவலா்களும், 40,427 காவல் துறை அல்லாத பணியாளா்களும், மத்திய ஆயுதப் படையின் 300 கம்பெனி படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும் மக்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா். தமிழகத்தின் சில இடங்களில் சிறு மோதல் சம்பவங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றது.
இரண்டு மணி நேர இடைவெளியில் வாக்குப் பதிவு சதவீதத்தை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி, காலை 9 மணியளவில் 17.69 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு, 11 மணிக்கு 37.56 சதவீதமாக அதிகரித்தது.
மக்கள் வெயிலையும் பொருள்படுத்தாமல் தொடா்ந்து வாக்குச்சாவடிகளுக்கு குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனா். இதனால் பிற்பகல் ஒரு மணியளவில் 56.81 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு, பிற்பகல் 3 மணிக்கு 70 சதவீதமாகவும், மாலை 5 மணிக்கு 82.24 சதவீதமாகவும் அதிகரித்தது.
வாக்குப் பதிவு மாலை 6 மணி முடிவடைந்த பின்னரும் சில வாக்குப் பதிவு மையங்களில் வாக்களிக்க வரிசையில் இருந்தவா்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். இறுதியாக சுமாா் 85 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.
