ஜெர்மனியில் இருந்து தில்லி சென்ற விமானத்தின் விமானி, கடத்தல் முயற்சிக்கான எச்சரிக்கை குறியீட்டை அனுப்பியதைத் தொடர்ந்து, அந்த விமானம் ஜெய்ப்பூரில் இன்று (14) அவசரத் தரையிறக்கப்பட்டது.
ஜெர்மனி நாட்டின் ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து தில்லி விமானம் நிலையம் நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், மும்பை வான் பரப்பில் இன்று காலை பறந்துகொண்டிருந்த போது, கடத்தல் முயற்சிக்கான ’ஸ்க்வாக் 7500’ என்ற சர்வதேச குறியீட்டை விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த விமானத்தின் விமானி அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அந்த விமானத்தை அவசர தரையிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஜெய்ப்பூரில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு சென்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவு, காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு உள்ளிட்டோர் விமானத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பயணிகள், அவர்களின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
