மகள் பவதாரிணியுடன் இசைஞானி
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏன், உலகம் முழுவதும் இசையின் குரலாக இருக்கும் இளையராஜாவின் உண்மையான பிறந்தநாள் தெரியுமா? அவருக்கு இளையராஜா என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8,600- க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியதுடன் உலகம் முழுவதும் 20,000 -க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். அதேபோல 1970களில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, 2000களிலும் தனது இசையால் மக்களை தன்வசம் வைத்துள்ளார்.
இளையராஜா பெயர் வந்தது எப்படி?
இளையராஜா என்ற பெயர் இன்று உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நிலையில், அந்த பெயர், அவருக்கு எப்படி எப்படி வந்தது தெரியுமா? இதுபற்றி அவரே ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
“என்னுடைய அப்பா எனக்கு இரண்டு பெயர்களை வைத்தார். ஒன்று ராஜய்யா, மற்றொன்று ஞான தேசிகன்.
என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து ‘ஞான தேசிகன்’ என்ற பெயரை வைத்தார். பள்ளியில் சேர்க்கும்போது சுருக்கமாக இருக்கட்டும் என்று ‘ராஜய்யா’ என்று வைத்தார். பின்னர் ‘ராஜய்யா’ என்றே அனைவரும் கூப்பிட்டார்கள். அடுத்து இங்கு சென்னைக்கு வந்தேன். ஹார்மோனியத்தை எடுத்துக்கொண்டு இசையைக் கற்றுக்கொள்ளலாம் என்று மேற்கத்திய இசை கற்றுக்கொடுக்கும் தன்ராஜ் மாஸ்டரிடம் வந்தேன்.
எம்.எஸ். விஸ்வநாதன், அவருக்கு முன்னால் எஸ்.வி. வெங்கட்ராமன், சி.ஆர். சுப்பராமன் போன்ற பெரிய இசையமைப்பாளர்கள் அனைவரும், தன்ராஜ் மாஸ்டரிடம் இசை கற்றுக்கொண்டு சினிமாவுக்கு வந்தவர்கள்தான்.
நானும் அவரிடம் போனேன். பெயரைக் கேட்டார். ‘ராஜய்யா’ என்று சொன்னேன். பெயர் நன்றாக இல்லை என்று கூறி ‘ராஜா’ என்று மாற்றிவிட்டார். பட வாய்ப்பு கிடைத்தபோது தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், நான் இசையமைத்த பாடலுக்கு ஏற்றவாறு ஒரு கதையமைத்து ‘அன்னக்கிளி’ என்ற படத்தை எடுத்தார்.
ஒரு லாட்ஜில் ஹார்மோனியம்கூட இல்லாமல் பாடல்களை வரிசையாகப் பாடினேன். அவர் அப்போது காமெடி படம் எடுத்துக்கொண்டிருப்பதாகக் கூறியதுடன், இந்த பாடல்களுக்காக ஒரு கதை தயார் செய்கிறேன் என்றார்.
நான் ஏற்கெனவே இசையமைப்பாளர் கோவர்த்தனனுடன் சேர்ந்து ‘கோவர்த்தன ராஜா’ என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறேன் என்று ‘அன்னக்கிளி’ படம் எடுக்கும்போது அவரிடம் கூறினேன். இல்லை, அந்தப் பெயர் எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டு ஏற்கெனவே ஏ.எம். ராஜா என்று ஒருவர் இருக்கிறார், அதனால் குழப்பம் ஏற்படும் என்று சொன்னார். ‘பாவலர் பிரதர்ஸ்’ என்ற பெயரை பரிந்துரைத்தபோது ‘அது பழைய பெயர்’ என்று கூறி நிராகரித்துவிட்டார்.
இறுதியாக ‘இளையராஜா’ என்று வைத்துக்கொள்ளச் சொன்னார். ‘சரி, போனால் போகட்டும், நீங்கள் எப்படி வேண்டுமானலும் கூப்பிட்டுக் கொள்ளுங்கள்’ என்று நினைத்து விட்டுவிட்டேன். அதிலிருந்து இளையராஜா என்ற பெயரே இருந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
ஜூன் 3ல் பிறந்தும் ஜூன் 2ல் பிறந்த நாள் கொண்டாடுவது ஏன்? இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் 1943 ஜூன் 3 ஆம் தேதி பிறந்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளும் அதேதான், ஜூன் 3! கருணாநிதிக்கு மரியாதை அளிக்கும் விதமாக, ஒரே நாளில் இரு கொண்டாட்டங்கள் வேண்டாமென, அதை மாற்றிக்கொண்டு, இளையராஜா தனது பிறந்த நாளை ஜூன் 2 ஆம் தேதியே கொண்டாடி வருகிறார்.
இளையராஜாவுக்கு ‘இசைஞானி’ என்ற பட்டத்தை வழங்கியவர் கருணாநிதி.
கருணாநிதி பற்றி இளையராஜா பேசியது, “ஜூன் 3 கலைஞர் கருணாநிதி பிறந்த நாள். தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய மாபெரும் பணியில் நான் ஒரு சிறு துளியைக்கூடச் செய்ததில்லை. நாங்கள் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். ஆனால், ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதிக்கு மட்டுமே அனைவரும் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும். நான் எனது பிறந்த நாளை ஜூன் 2 அன்று கொண்டாட முடிவு செய்துள்ளேன்” என்றார்.
பின்னர் லண்டனில் உள்ள ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா, இளையராஜாவுக்கு ‘மேஸ்ட்ரோ’ பட்டத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
50 ஆண்டுகள் நிறைவடைந்த, இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி (1976) முதல் சமீபத்தில் வெளியான ‘விடுதலை’ படம் வரை அவரது இசையும் பாடல்களும் சற்றும் குறைவின்றி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
எம். முத்துமாரி – தினமணி
