இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ஆறுகள,நீர்நிலைகள் பெருக்கெடுத்துள்ளன.
களுகங்கையின் நீர் மட்டம் 9 அடியை விட அதிகரித்து காணப்படுவதால் இரத்தினபுரி நகரத்தில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரியை அண்டிய பட்டுகெதரை, எலபாத்தை, கரங்கொடை, திமியாவை,.ஹக்கமுவை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. அத்துடன் பல்லாயிரக்கணக்கான வயல்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ளம் காரணமாக இரத்தினபுரி, பாணந்துறை வீதி உள்ளிட்ட பல வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இஃது இவ்வாறிருக்க இம்மாவட்டத்தில் ஆங்காங்கே மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.பல பகுதிகளில் மரங்களும் சரிந்து வீழ்ந்து பலவீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன
இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி அல்மக்கியா மு. ம. வித்தியாலயம், சீவலி மகா வித்தியாலயம் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இம்மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகக் காணப்படுகிறது.
வெள்ளம் ,மண்சரிவு, மண்சரிவு அபாயம் காரணமாக இம்மாவட்டத்தில் இதுவரை 37 குடும்பத்தைச் சேர்ந்த 122 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஹப்புகஸ்தன்னை சனசமூக நிலையத்தில் 27 குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
இடரனர்த்தம் காரணமாகப் பாடசாலை பாதிக்கப்பட்டால் அப்பாடசாலையை மூடும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி எஸ். ஆர். இரவீந்திரன்
