டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிவ் அண்மையில் இறந்த இளம் பெண்ணின் சடலத்திற்குப் பாலியல் கொடுமை புரியப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (08) நடத்தத் திட்டமிட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஹற்றன் நீதவான் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
அந்நிலையில், வைத்தியசாலையில் பணிபுரியும் மூன்று பணியாளர்களால் பெண்ணின் உடல் பாலியல் கொடுமைககு உள்ளாக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், சம்பவம் தொடர்பாக தவறிழைத்தவர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதனை எதிர்த்து கடந்த மாதம் 3 ஆம் திகதி கிளங்கன் வைத்தியசாலை வளாகத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அப்போது போராட்டக்காரர்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதுவரை சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இன்று அமைதிவழி கண்டன போராட்டம் நடத்த இதொகாவல் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை வழங்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இன்று (08) இந்த அமைதிவழி கண்டன போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இந்த போராட்டத்தைத் தடுக்க நோர்வூட் காவல் நிலையத்தினால் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்த தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கி நீதிபதி தமயந்தி பெர்னான்டோ இந்தத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர்- பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், பிரதி தலைவர் கனபதி கனகராஜ், நோர்வூட் பிரதேச சபை முன்னாள் தலைவர் குழந்தைவேல் ரவி, ஹட்டன் நகர சபை முதல்வர் பெருமாள் சுரேந்திரன் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் முதலானோருக்கு எதிராகவே இந்த நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
