வென்சர் தோட்ட மதுபான உரிமத்தைப் புதுப்பிக்காதே என்று இன்று 200 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈபட்டனர்.
நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்சர் தோட்டத்தில் சுமார் 25 வருடங்களாக இயங்கி வரும் மதுபானசாலையின் உரிமத்தை மீண்டும் புதுப்பிக்காது, அதனை உடனடியாக ரத்து செய்யக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் இன்று (03) காலை பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் வென்சர் தோட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
- பொது இடங்களுக்கு இடையூறு: மதுபானசாலைக்கு அருகிலேயே ஆலயம், பாடசாலை மற்றும் விளையாட்டு மைதானம் என்பன அமைந்துள்ளதால், மத வழிபாடுகள் மற்றும் பொது நிகழ்வுகளின் போது தொடர்ச்சியான அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.
- கல்வி பாதிப்பு: ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்கள் கூட, இந்தச் சூழல் பாதிப்பினால் கனிஷ்ட தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோல்வியடையும் நிலை காணப்படுவதாகப் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
- கடனில் மூழ்கும் இளைஞர்கள்: இப்பகுதி இளைஞர்கள் இந்த மதுபானசாலையில் மாதக் கணக்கில் (புத்தகத்தில் எழுதி வைத்து) மதுபானம் பெற்றுக்கொள்வதற்குப் பழகியுள்ளதால், அவர்கள் கடும் கடன் சுமைக்கும் போதைக்கும் அடிமையாகியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
- அமைதியின்மை: இந்த மதுபானசாலையினால் பிரதேசத்தின் அமைதி சீர்குலைந்துள்ளதுடன், கடந்த காலங்களில் ஒரு உயிர் இழப்பு கூட ஏற்படுவதற்கு இந்த அமைதியற்ற சூழல் காரணமாக இருந்ததாகத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த மதுபானசாலை எமது கிராமத்திற்குப் பெரும் தொல்லையாக உள்ளது. தற்போது அதன் உரிமம் காலாவதியாகியுள்ளது.
எனவே, ஜனாதிபதி அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு, இந்த உரிமத்தைப் புதுப்பிக்காமல் மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோர்வுட் பிரதேச சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு மக்களுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
கௌசல்யா
