1969 ஆம் ஆண்டு காலப் பகுதியில் முன்னைய மஸ்கெலியா நகரம் மவுஸ்சாகலை நீர்த்தேக்க அமைப்பால் நீரில் மூழ்கியது.
புதிய நகரம் காட்டு மஸ்கெலியா மற்றும் பெரிய நடு தோட்டங்களுக்கு உரித்தான காணியை அரசு பொறுப்பேற்று நீரில் மூழ்கிய மஸ்கெலியா நகரில் வசித்து வந்த வர்த்தகர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அரச நிறுவனங்கள் போன்ற வற்றுக்கு வழங்கியது.
அக்காலத்தில் மஸ்கெலியா நகரில் அரச பேருந்து தரிப்பிடத்திற்குத் தனியாக இடம் ஒதுக்க பட்டது.
1979.07.21 ஆம் திகதி அன்றைய மகாவலி அபிவிருத்தி அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காலம் சென்ற காமினி திசாநாயக்க பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
துரித கதியில் அப் பேருந்து நிலையம் முறையாக அமைக்கப்பட்டு 1981.01 24 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
அக் காலத்தில் பேருந்து நிலைய பகுதியில் மக்கள் நலன் கருதி குடிநீர் தாங்கி ஒன்று அமைக்கப்பட்டது.
காலப்போக்கில் அந்தக் குடிநீர் தாங்கியில் குழந்தை ஒன்று தவறி விழுந்த நிலையில் அந்த நீர் தாங்கி மூடப் பட்டது.
காலம் கடந்து செல்ல தனி நபர் ஒருவர் அந்த இடத்தை தன்னகப்படுத்திக் கொண்ட நிலையில், 2023/2024 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அந்த இடத்தில் மூன்று மாடி கட்டடம் அமைத்து அங்கு மதுபான சாலை ஒன்றை அமைத்து உள்ளார்.
மேலும் தற்போது மதுபான சாலையின் பின் புறம் பாரிய இரும்பினால் செய்யப்பட்ட கண்டேனர் ஒன்றை வைத்து அதற்கு நீர், மின் இணைப்பு பெற முயற்சி செய்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
