நாவலப்பிட்டியைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பை வசிப்பிடமாகக் கொண்டவரும் அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் மத்திய மாகாண இணைப்பாளருமான சித்தமருத்துவர் சுரேந்திரன்,2026 செப்டம்பர் 29ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை, தனது 32ஆவது வயதில் சிவகதியடைந்தார்.
இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவப் பட்டதாரி ஆவார். 2013/14ஆம் கல்வியாண்டுத் தொகுதியைச் சேர்ந்த இவர், தனது உள்ளகப் பயிற்சியை கொழும்பு பொரளை தேசிய வைத்தியசாலையிலும் திருகோணமலை கப்பல்துறை வைத்தியசாலையிலும் மேற்கொண்டார்.
அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் மத்திய மாகாண இணைப்பாளரான இவர், சங்கத்தின் செயலாளரான சித்தமருத்துவர் சகானாவின் அன்புக் கணவரும் ஆவார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக சங்கத்துடன் தொடர்ச்சியாக இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த மருத்துவர் சுரேந்திரன், சித்தம், ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளை அடிப்படையாகக் கொண்டு சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற புதிய சிந்தனையை முன்வைத்தவர்.
பாரம்பரிய மருத்துவத்தையும் சுற்றுலாத்துறையையும் ஒருங்கிணைத்து, இலங்கையின் பாரம்பரிய மருத்துவத் துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்துவதற்கான புதிய நோக்கையும் கருத்துக்களையும் சங்கத்தினரிடையே வெளிக்கொணர்ந்தார்.
சித்த மருத்துவத்தைத் தனது வாழ்வின் அடையாளமாகக் கொண்டு வாழ்ந்த இவர், கடந்த டித்வா அனர்த்தத்தின் போதும் முன்னின்று செயற்பட்டார்.
சித்த மருத்துவச் செயற்பாடுகளைப் பல்வேறு வழிகளிலும் திறம்பட முன்னெடுப்பதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதிலும் முக்கிய பங்காற்றினார்.
நோயாளிகளுடன் மட்டுமன்றி, சக மருத்துவர்கள், நண்பர்கள்,அனைவருடனும் அன்பாகவும் சுமுகமாகவும் பழகும் இயல்புடையவராக அவர் திகழ்ந்தார்.
தனது பணிகளின் ஊடாகவும், புதிய சிந்தனைகள், சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளின் ஊடாகவும் பலருடன் நெருக்கமான உறவைப் பேணிவந்த அவரது மறைவு, குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமன்றி, சித்த மருத்துவச் சமூகத்திற்கும் அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
இளம் வயதில் அவரது மறைவு, அவர் முன்னெடுத்துச் செல்ல விரும்பிய பல்வேறு சிந்தனைகளையும் எதிர்காலக் கனவுகளையும் நினைவுகூரச் செய்கின்றது.
சங்கத்துடன் கடந்த நான்கு ஆண்டுகளாக இணைந்து அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான பணிகளும், சித்த மருத்துவத் துறையின் வளர்ச்சிக்காக அவர் முன்வைத்த கருத்துகளும் என்றும் நினைவுகூரப்படும்.
அன்னாரின் மறைவையொட்டி, எமது சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
இத்துயரமான இழப்பால் துயருற்றிருக்கும் அவரது அன்பு மனைவியும் சங்கத்தின் செயலாளருமான சித்தமருத்துவர் சகானா, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்,சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், இத்துயரத்தைத் தாங்கும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கு வழங்குமாறும் இறைவனை வேண்டுகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
— அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்
கௌசல்யா
