தோட்ட பெண்களுக்கு குரங்குகள் தொல்லை என மெதமஹநுவரை வைத்தலாவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மத்திய மாகாணத்தின் கண்டி மெதமஹநுவரை, வைத்தலாவை (Waitalawa) தோட்டத்தில் அண்மைக்காலமாக குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பெரும் அசௌகரியங்களுக்கும் அச்சத்திற்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள்,பெண்கள் ஒன்று கூடும், பொது இடங்கள், வேலைத் தளங்கள்,குடியிருப்புகளைச் சூழவுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக வந்தமர்ந்துகொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
மக்கள் நடமாடும் பகுதிகளிலுள்ள கட்டடங்களின் கூரைகள் மீது எவ்வித அச்சமுமின்றி குரங்குகள் ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிகிறது.
லொனாக் பிரதான பாதையை உடனடியாகச் சீரமைக்கவும்
தோட்ட பெண்களுக்கு குரங்குகள் தொல்லை என அப்பகுதிப் பெண்கள் கருத்து தெரிவிக்கையில்,
”நாங்கள் வீடுகளில் தனியாக இருக்கும்போது அல்லது வேலைத் தளங்களில் இருக்கும்போது குரங்குகள் கூட்டமாக வந்து உணவுகளைப் பறித்துச் செல்கின்றன.
எங்களைத் தாக்க முற்படுகின்றன. இதனால் பிள்ளைகளையும் எங்களையும் பாதுகாப்பதே பெரும் போராட்டமாக உள்ளது.
வீட்டின் கூரைகள் மீது ஏறி குதிப்பதால் வீடுகளும் சேதமடைகின்றன,” எனக் கவலை வெளியிட்டனர்.
வீட்டுத் தோட்டப் பயிர்கள், சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருள்களையும் இக்குரங்குகள் நாசம் செய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தனி ஒரு குரங்கு பெண்கள் நடமாட்டத்தை அவதானித்து பெரும் தொல்லை கொடுத்து வருவதாகவும் இதனால் பெண்கள் நடமாட பெரும் அச்சமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தலாவை தோட்ட பெண்களுக்கு குரங்குகள் தொல்லை தீவிரமடைந்து வருவதால் இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அந்தத் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து, குரங்குகளைப் பிடிக்க முடியாமல் மக்களை பிடித்துத் தருமாறு கூறிச் சென்றுள்ளதாகப் பெண்கள் குறிப்பிடுகின்றனர்.
வன ஜீவராசிகள் திணைக்களமும் தோட்ட நிர்வாகமும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குரங்குகளைப் பிடித்து பாதுகாப்பான காட்டுப் பகுதிகளுக்கு இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
