திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய திரைத்துறையின் பழைமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ்.
தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் தயாரித்துள்ளது.
நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரை வெள்ளித்துறையில் அறிமுகம் செய்த நிறுவனம்.
இதன் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகன்களில் ஒருவர்தான் ஏவிஎம் சரவணன். தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ஏவிஎம் சரவணன் கவனித்துள்ளார்.
இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பையும் இவர் கவனித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.
