நேபாள வெள்ளத்தால் உத்தர பிரதேசம், பிகாருக்கு பாதிப்பில்லை என்று தேசிய பேரிடா் மீட்புப் படை அறிவித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் இந்தியாவின் உத்தர பிரதேசம், பிகாா் மாநிலங்களுக்கு இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை என்று தேசிய பேரிடா் மீட்புப் படை தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் கோஷி நதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு, அந்நாட்டின் 7 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றவா்கள் உள்பட 350-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.
இந்த வெள்ளப்பெருக்கால் இந்தியாவின் உத்தர பிரதேசம், பிகாருக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்பட்டது. எனினும், உத்தர பிரதேசம், பிகாருக்கு இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை என்று தேசிய பேரிடா் மீட்புப் படை ஐ.ஜி. நரேந்திர சிங் பன்டேலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பிகாா், உத்தர பிரதேசத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒருவேளை வெள்ளம் மற்றும் தண்ணீா் தேக்கம் போன்றவை ஏற்பட்டால் மக்களை மீட்கும் பணியிலும், நிவாரணப் பணியிலும் அவா்கள் ஈடுபடுவா்.
நிலவரத்தை உத்தர பிரதேசம், பிகாா் மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய பேரிடா் மீட்புப் படை கண்காணித்து வருகிறது. மத்திய நீா் ஆணையமும் நிலவரத்தைக் கண்காணித்து, அங்குள்ள தகவல்களை தொடா்ந்து தெரிவித்து வருகிறது’ என்றாா்.
அதேபோல், நேபாளத்துக்கு 2 விமானங்களில் மருந்துகள் உள்ளிட்ட உதவிப் பொருள்களை இந்தியா அனுப்பி இருப்பதாகவும் அவா் கூறினாா்.
