பாழடைந்த வெள்ளாந்துறை ஆஸ்பத்திரியை பிரதியமைச்சர் சு. பிரதீப் பார்வையிட்டார்.
கடந்த ஆட்சியாளர்களின் ஊழலால் பாழடைந்து போன காவத்தை வெள்ளாந்துறை தோட்ட ஆஸ்பத்திரியைப் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேரில் சென்று ஆய்வுசெய்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் செலவழித்தும் முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல், முன்னைய ஆட்சியாளர்களின் ஊழலால் பாழடைந்து கிடக்கும் இந்த வைத்தியசாலை,வெள்ளாந்துறை,புங்கிரியா,நாம்புலுவை, கலல்லெல்லை உள்ளிட்ட ஐந்து தோட்டங்களைச் சேரந்தவர்கள் மட்டுமின்றி இத்தோட்டங்களை அண்மித்த கிராமத்தினருக்கும் பயன்பட்டுவந்தது.



பிரசவ அறை, பிணவறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலை 2022,2023ஆம் ஆண்டுகளில் புனரமைப்பு செய்யப்பட்டாலும் அதன் பணிகள் முழுமைப்படுத்தப்படாமையால் தற்போது பாழடைந்து கிடக்கின்றது.
தற்போது, சுமார் 9, 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஹவத்தை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று (12) வைத்தியசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய நேரடியாக அங்கு சென்ற பிரதி அமைச்சர், இது தொடர்பில், சபரகமுவை மாகாண சுகாதார பணிப்பாளருடன் தொடர்புகொண்டு தகவல்களைக் கேட்டறிந்தார்.
இதனை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கவனத்துக்கு கொண்டு சென்று வைத்தியசாலையை விரைவாக திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
பிரதியமைச்சரின் ஊடகப்பிரிவு
