மலையகம்வாழ் தமிழ் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மலையகம் வாழ் தமிழ் மக்களின் காணி உரிமை, வீடமைப்பு,மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் பேரவையின் பிரதிநிதிகளுடன் இணைந்து, நேற்று (03.08.2026) கொழும்புவில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் மலையகம் வாழ் தமிழ் மக்களின் காணி உரிமை, வீடமைப்பு, இந்திய உதவித் திட்டங்களின் நடைமுறைச் சவால்கள்,மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இ.தொ.கா பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்,ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.



வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மலையகத்தில் காணி,வீடமைப்பு பிரச்சினைகள் இன்னமும் தீர்வு காணப்படாமல் தொடர்வதைச் சுட்டிக்காட்டினேன்.
இஃது அரசாங்கத்தின் மீதான விமர்சனம் அல்ல; மாறாக, நீண்டகாலமாக நிலவி வரும் முறைமை சார்ந்த பிரச்சினை என்பதையும் தெளிவுபடுத்தினோம்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை முறை காரணமாக காணிகளை விடுவிப்பதில் பாரிய சிக்கல்கள் நிலவுகின்றன.காணி விடுவிக்கப்பட்டாலும் தோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வீடமைப்பு முன்னுரிமை வழங்கப்படும் என்ற நிபந்தனை நடைமுறையில் இருப்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
இந்திய உதவியின் கீழ் மலையகம் வாழ் தமிழ் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அந்த மக்களுக்கு வீட்டுரிமை கிடைத்த போதிலும், நீர்,மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் தெளிவுப்படுத்தினேன்.
மலையக வீடமைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 5 பில்லியன் ரூபாய் நிதி போதுமானதல்ல என்பதால், எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் அந்த நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அந்த நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அதேபோல், கடந்த முறை ஒதுக்கப்பட்ட 7 பில்லியன் ரூபாய் நிதியில் 67% இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியாக இருந்ததை சுட்டிக்காட்டி, மலையக மக்களுக்கான வீடமைப்பில் இலங்கை அரசாங்கத்தின் நேரடி நிதி ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினேன்.
காணி வழங்குவது எளிதான விடயம் அல்ல என்றும், வளங்கள்,மலையக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் உள்ளதாக ஜனாதிபதி தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
எனினும்,அந்தக் கருத்துடன் எமக்கு உடன்பாடு இல்லை என்பதையும், மலையகம் தமிழ் மக்களுக்கு உறுதியான காணி உரிமை வழங்கப்படுவது காலத்தின் கட்டாயம் என்பதையும் உறுதியாக எடுத்துரைத்தோம்.
மேலும், மாகாண சபை என்பது தமிழர்களுக்கு மட்டும் உரிய விடயம் அல்ல; அது இலங்கையின் அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் அவசியமான அதிகாரப் பரவலாக்கத்தின் அடையாளமாகும் என்பதை வலியுறுத்தினோம்.
13 மாவட்டங்களில் 10% முதல் 15% வரை சிறுபான்மையாக வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலமே உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறது.
எனவே, தேர்தல் முறை மாற்றப்பட்டால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
புதிய அரசியலமைப்பு அமுலுக்கு வரும் வரை தற்போதைய தேர்தல் முறையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக நடைமுறை ரீதியான தீர்மானங்கள் எவ்வாறு எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்துச் செயற்படுவோம் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
