ஹற்றன் பொல்பிட்டியில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஹற்றன், பொல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகமை கிராமத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல்போயிருந்த நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பக்கட்டத் தேடுதல் நடவடிக்கைகளில் 82 வயதான மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. நேற்றிரவு (03) மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் மேலும் பெண்கள் இருவரினதும் ஓர் ஆணினதும் சடலங்களை மீட்டனர்.
எனினும், தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.00 மணி நிலவரப்படி, 581 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அம்பகமுவை பகுதியில் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன இருவர் உட்பட மொத்தம் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கௌசல்யா
