மலைநாட்டில் இடைவிடாது கனமழை பெய்வதோடு கடுங்காற்றும் வீசுகிறது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நீர் ஏந்து பகுதிகளான மவுஸ்சாகலை நீர்த் தேக்க பகுதியில் நேற்றைய தினம் 117 .5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதேபோல் லக்சபானை நீர் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் 183.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளததாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது.
சாமி மலை ஓயா, மறே ஓயா, சியத்தலகங்குலை ஓயா, காட்மோர் ஓயா சிற்றாறுகள், காட்மோர் அருவி, மோகினி அருவி, மறே அருவி, லக்சபானை அருவிகளில் அதிக அளவில் வெள்ளம் பாய்ந்த நிலையில் உள்ளது.
இதன் காரணமாக நீர் வீழ்ச்சிப் பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமலசுரேந்திரா நீர்த் தேக்க தத்தின் நீர் நிரம்பி மதகு வழியாக நீர் வெளியேற்றம் செய்ய படுவதால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேண்ட், லக்சபானை, பொல்பிட்டி, நவலக்சபானை, கலுகலை, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. எந்நேரத்திலும் வான் கதவுகள் திறக்கும் நிலை ஏற்படும் என நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மஸ்கெலியா நிருபர்
