பன்விலையில் திடீரென வீதி குமுறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டி, வத்தேகமை பிரதேசத்திலிருந்து கபரகலை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், பன்விலை நகரப் பகுதியில் திடீரென வீதியின் ஒரு பகுதி மேலெழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.
வீதியில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கண்டு, ஏதேனும் ஆபத்து ஏற்படப் போகிறது என பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதனையடுத்து, பன்விலை பொலிஸார் வீதியை தற்காலிகமாக போக்குவரத்துக்காக மூடினர்.
சிறிது நேரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், வீதியில் இடப்பட்டிருந்த காப்பெட்டு (தார்) பகுதி மேலெழுந்ததற்குக் காரணம், வீதியின் கீழ் செல்லும் குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட கசிவு எனத் தெரியவந்தது.
குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக நிலத்தடி நீர் வெளியேறி, வீதியின் மேற்பரப்பில் அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாகவே பன்விலையில் திடீரென வீதி மேலெழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலைமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, வீதி மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலைமை முடிவுக்கு வந்தது.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
