இலங்கை பக்தர்களுக்கு இலவச வீசா மீண்டும் வழங்க இந்திய உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவின் புத்தகயா உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும் இலங்கைப் பக்தர்களுக்காக வழங்கப்பட்டு வரும் இலவச (Gratis) விசா வசதி எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
விசா சேவைகளை வழங்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக குறித்த வசதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனினும், புதிய சேவை வழங்குநர் தனது பணிகளை ஆரம்பித்ததையடுத்து, இலங்கை பக்தர்களுக்கு இலவச வீசா மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் விசேட பரிந்துரையுடன், குறைந்தது 10 பேர் கொண்ட குழுக்களாக இந்தியாவிற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கு இந்த இலவச விசா வழங்கப்படும்.
யாத்திரிகர்கள் இந்திய e-Visa சேவையின் மூலமாகவோ அல்லது வழக்கமான நடைமுறையின் கீழ் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரக விண்ணப்ப மையங்கள் (ICAC) ஊடாக இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
புதிய விதிமுறைகளின்படி, 12 முதல் 70 வயதுக்குட்பட்ட அனைத்து யாத்திரிகர்களும் குழுவாகவோ அல்லது தனிநபர்களாகவோ சம்பந்தப்பட்ட ICAC மையத்திற்கு நேரில் சென்று தங்களது உயிர்மெய் (Biometric) தகவல்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், மூத்த பிரஜைகள் எதிர்கொள்ளக்கூடிய தாமதங்களைத் தவிர்க்கும் வகையில் விரைவு சேவை (Expedited Process) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையின் கீழ் விண்ணப்பிக்கும் யாத்திரிகர்களிடமிருந்து விசா கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது.
எனினும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் சேவை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட ICAC மையத்திற்கு ரூ. 1,855 சேவை கட்டணமாக மட்டுமே செலுத்த வேண்டுமென இந்திய உயர்ஸ்தானிகரகம் மேலும் தெரிவித்துள்ளது.
எஸ். ஆர். இரவீந்திரன்
