தனது பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் 10 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், பாடசாலை அதிபர் ஒருவரை ஜூலை மாதம் 2-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் காமுனு சந்திரசேகரா (ஜூன் 20) உத்தரவிட்டுள்ளார்.
கொஸ்லாந்தை, கலிபனாவலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அவருக்கு வயது 56 ஆகும்.
அவரது பாடசாலையில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக, பாடசாலை நேரம் முடிந்த பின்னர் அதிபரால் மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. கடந்த 18-ஆம் திகதி வகுப்புக்கு வந்த மாணவர்களுள் இருந்த ஒரு சிறுமியை, வகுப்பறையின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்துச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்ட கொஸ்லாந்தைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஓ. சி. சுபசிங்கா, சந்தேகநபரான அதிபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கௌசல்யா

