மஸ்கெலியா, ஜூன் 2026: மஸகெலியா கங்கேவத்தை தமிழ் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர (க.பொ.த.) சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாடசாலை குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இவ்வாண்டு பரீட்சைக்குத் தோற்றிய 26 மாணவர்களில் 18 மாணவர்கள் (65.5%) உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.


அத்துடன், பாடசாலையின் சிறந்த பெறுபேற்றினை கங்கேவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ராஜலெட்சுமன் மதுமித்தா பெற்றுள்ளார். இவர் 9 பாடங்களிலும் சித்தியடைந்து, 3A, 3B மற்றும் 3C பெறுபேறுகளைப் பெற்று உயர்தரக் கல்விக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்த தரம் 11 வகுப்பின் பொறுப்பாசிரியர் ஆர். தயாளன், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,“இப்பெறுபேறுகள் மாணவர்களின் கடின உழைப்பு, பெற்றோரின் ஒத்துழைப்பு,ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கூட்டு வெற்றியாகும். மாணவர்களுக்குச் சிறந்த கல்வியையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி இச்சாதனையை உருவாக்க பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் சார்பாக இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அத்துடன், மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக தொடர்ச்சியான வழிகாட்டுதல்களையும் ஆதரவுகளையும் வழங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும், குறிப்பாக ஆரம்ப, இடைநிலைப் பிரிவு ஆசிரியர்களுக்கும் அவர் தனது விசேட நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், தரம் 11 வகுப்பின் பொறுப்பை ஒப்படைத்து தேவையான ஆலோசனைகள்,வழிகாட்டுதல்களை வழங்கி இவ்வெற்றிக்குத் துணை நின்ற பாடசாலை அதிபருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
“பாடசாலையின் வெற்றி எமது அனைவரினதும் வெற்றியாகும். பாடசாலையின் கீர்த்தியையும் கல்வித் தரத்தையும் உயர்த்த பங்களித்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,நலன்விரும்பிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தகவல்: பெ.கோபிநாத்

