தில்லி ஹோட்டல் தீவிபத்தின்போது உயிர் தப்புவதற்காகத் தன் பிள்ளையுடன் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தில்லி மாளவியா நகரில் உள்ள விடுதி ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 40பேர் காயமடைந்தனர். இந்த விபத்தின்போது மாடியிலிருந்து குதித்த சிலருக்குக் கால் முறிந்துள்ளது.
காலை 9.40 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.
இதுவரை 40 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலியானவர்களில் பலர் மத்திய ஆசியா,ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் தெரிவிக்கின்றது. இவர்கள் மருத்துவ தேவைகளுக்காக வந்து தங்கியிருந்தவர்கள் என்று அறியவருகிறது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, தில்லி முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளார்கள்.
பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அளிக்கப்படும் எனத் தெரிவித்து உள்ளார்.
