காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் ‘சிவகங்கை’ கப்பல், நாளை ஜூன் 3ஆம் திகதி முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ‘சுபம்’ கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம். ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக சில வாரங்களுக்கு முன்னர் கப்பல் பழுதடைந்ததைத் தொடர்ந்து, அதன் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
தற்போது கப்பலின் பழுதுபார்க்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், நாளை புதன்கிழமை முதல் வழமையான சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் ஏனைய ஆறு நாள்களிலும் கப்பல் சேவை வழமைபோல் இடம்பெறும் எனக் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணச்சீட்டு முன்பதிவுகளை சுபம் கப்பல் சேவை இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளலாம். மேலும், 021 222 4647, 011 764 2117 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமும் முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் பயணிகளை இணைக்கும் முக்கிய சேவையாக விளங்கும் காங்கேசன்துறை–நாகப்பட்டினம் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படுவது பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
