அண்மையில் ஏற்பட்ட “தித்துவா” அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (27) பத்தரமுல்லையில் உள்ள பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்குத் தேவையான காணிகளைப் பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டுவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகும்.
அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு அபாயம் உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்தால் வழங்க திட்டமிடப்பட்டுள்ள காணிகளுக்கு மேலதிகமாக, பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான பொருத்தமான காணிகளையும் பயன்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தோட்டச் சமூகத்தினர் தற்போது வசிக்கும் தோட்டப் பகுதிகளிலேயே அவர்களுக்குப் புதிய காணிகளை வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
“அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட, மண் சரிவு அபாயத்திற்கு உள்ளான
மக்களுக்கு விரைவில் நிரந்தர வீடுகளை வழங்குவது எமது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாகும். அதற்காக பெருந்தோட்ட நிறுவனங்களின் அதிகபட்ச ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்” என பிரதி அமைச்சர்அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு
வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, அமைச்சின் மேலதிகச் செயலாளர்கள், பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவின் (P.M.M.D) அதிகாரிகள், பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) பலரும் கலந்துகொண்டனர்.
ஊடகப் பிரிவு
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு

