கினிகத்தேனை பகுதியில் இன்று மாலை வீசிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பாடசாலை மாணவிகள் இருவர் காயமடைந்தனர். இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம் பெற்றுள்ளது
இது குறித்து கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், இன்று 8 ஆம் திகதி மாலை வேளையில் அம்பகமுவை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது. அப்போது கினிகத்தேன பேருந்து நிலைய பகுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் பேருந்து நிலைய பகுதியில் இருந்த கினிகத்தேன கோணவில சிங்கள பாடசாலையில் கல்வி பயிலும் 13 வயது உடைய மாணவியும் கினிகத்தேன மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 11 வயது மாணவியும் படு காயங்களுடன் கினிகத்தேன மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும் இந்த கடும் காற்றினால் கினிக்கத்தேன மாவட்ட வைத்திய சாலையில் உள்ள பிரேத அறையின் கூரையும் காற்றில் அள்ளுண்டு சென்றது எனவும் அவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

