க. பொ. த சாதாரணதர பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கான ஊக்குவிப்புச் செயல்திட்டம் மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரியின் அதிபர் திருமதி மஞ்சுளா சந்திரசேகரம் பிள்ளை தலைமையில்,இலண்டனில் வசிப்பவரும் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமான வ. தம்பிராஜா பிரதீபனின் அனுசரணையில் உதவி அதிபர் வீ. ஜெயக்குமாரின் நெறிப்படுத்தலில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஐந்து வருடங்களாக சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி திட்டம் இடம்பெற்று வருகின்றது.
2023 ஆம் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க. பொ. த சாதாரணதர பெறுபேறுகளின் அடிப்படையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ள 52 மாணவர்களுக்கான பரிசளிப்பு அண்மையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக மாத்தளை இந்துக் கல்லூரியினதும் யாழ் மத்திய கல்லூரியினதும் முன்னாள் அதிபரான கலாநிதி எஸ்.கே. எழில்வேந்தன் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதியாக நிகழ்வின் அனுசரணையாளர் தம்பிராஜா பிரதீபனும் விசேட அதிதியாக பாக்கியம்,இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் பிரபல சட்டத்தரணியுமான துரைசாமி லோகேஸ்வரனும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் 2023 ஆம் 2024 ஆம் ஆண்டுகளில் க. பொ. த சாதாரணதர பரீட்சைககுத் தோற்றி மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு பிரதம அதிதியால் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 10 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப் பரிசளிப்பு நிகழ்ச்சி திட்டம் 2023 ஆம் 2024 ஆம் ஆண்டுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 52 மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாடசாலைக்கான உதவிக் கல்வி பணிப்பாளர் பிரகாஷ், முகாமைத்துவ குழுவினர், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆசிரியர்கள்,பெற்றோர்கள, பழைய மாணவர்கள், மாணவர்கள் போன்றோர் பிரசன்னமாயிருந்தனர்.
2019 முதல் 2024 வரை உள்ள ஆண்டு காலப்பகுதியில் மொத்தமாக 98 மாணவர்கள் விசேட சித்திகளைப் பெற்றுள்ளனர்.. இவர்களில் கணிசமான மாணவர்கள் தற்போது பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடர்வதோடு இன்னும் பலர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முன்னாள் இந்து தேசிய கல்லூரி அதிபர் கலாநிதி எஸ். கே. எழில்வேந்தன் பாடசாலை நிர்வாகத்தினால் கௌரவிக்கப்பட்டார் .
அத்துடன் அண்மையில் ஓய்வுபெற்ற கல்லூரியின் அதிபர் திருமதி மஞ்சுளா சந்திரசேகரம் பிள்ளை, இச்செயல் திட்டத்திற்கு பொறுப்பான கல்லூரியின் உதவி அதிபர் வீ. ஜெயக்குமார் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். அதிதிகள் அனைவருக்கும் நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
பன்விலை நிருபர் ம. நவநீதன்





