இரத்தினபுரி, ஹப்புகஸ்தன்னை தோட்ட வைத்தியசாலை தற்போது துரிதமாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த மாவட்டத்திலுள்ள மிகப் பெரியதும் பழைமையானதுமான இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளைப் பிரதியமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் நேற்று முன்தினம் (27) நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது தோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய. ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் வகையில் மலையகத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வைத்தியசாலைகளைப் புனரமைக்கும் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளைப் புனரமைப்பதற்காக அரசாங்கத்தினால்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஹப்பகஸ்தன்னை தோட்ட வைத்தியசாலையையும் புனரமைப்பதற்கு பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 45 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது புனரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வைத்தியசாலைக்குத் தேவையான வைத்தியர்கள், ஏனைய வசதிகளை வெகு விரைவாக பெற்றுக் கொடுப்படுதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜே.லக்ஷ்மிதாசன், செ. தி. பெருமாள்



