கொத்தியாபுலையில் காணாமல் போன பெண் நெல்லுக்காடு கிணற்றில் குற்றுயிராக மீட்பு… கிணற்றினுள் இன்னுமொரு பெண்ணின் சடலமும் மீட்பு….
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்றைய தினம் கடத்தப்பட்ட பெண் ஒருவர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுக் கிணற்றினுள் இருந்து குற்றுயிராக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேநேரம் அந்தக் கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு,பால்பண்ணை என்னும் பகுதியில் உள்ள வயல் பகுதியில் இன்று காலை பால்பண்ணைக்குச் செல்லும் சிலர் அந்தப் பொதுக் கிணற்றினுள் இருந்து அலறல் சத்தம் வருவதைக் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் கிடப்பதை அவதானித்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் அவசர பிரிவிற்குத் தகவல் வழங்கினர் அதையடுத்து அப்பகுதிக்கு வந்த கொக்கட்டிச்சோலைப் பொலிசாரினால் பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் கிணற்றினுள் இன்னுமொரு சடலம் இருப்பதுவும் அறியப்பட்டு அநந்தச் சடலத்தை மீட்கும் நடவடிக்கை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டது.
நேற்றைய தினம் கொத்தியாபுலையினை சேர்ந்த 26 வயதுடைய முருகமூர்த்தி ரனுஜா என்னும் பெண் மகளுடன் வந்தபோது மகளை இழுத்து வீசிவிட்டு பெண் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கொக்கட்டிகச்சோலைப் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் கிணற்றினுள் இருக்கும் மற்றுமொரு சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நாற்பதுவட்டை பகுதியில் காணாமல் போன பெண் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியில் காணப்பட்ட பாதணியைக்கொண்டு அந்தப் பெண் என உறவினர்கள் அடையாளம் காட்டியபோதிலும் முறையான மரண விசாரணை மற்றும் டிஎன்ஏ சோதனையின் மூலமே அடையாளம் உறுதிப்படுத்தப்படும் எனப் பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.
அந்தப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன், சடலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார். சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்கள்பபு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல பணிப்புரை விடுத்தார்.
வவுணதீவில் கடத்தப்பட்ட பெண்ணும் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் கடத்தப்பட்ட பெண்ணும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள கிணற்றில் போடப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர்.
பெண்கள் கடத்தப்பட்டு அவர்களின் தங்க நகைகள் களவாடப்பட்ட பின்னர் இந்தக் கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னரே பின்னணி குறித்து வெளியிடமுடியும் எனக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
சா. நடனசபேசன்
