மலையக தோட்ட பிரதேசங்களில் நூலகங்கள் என்பது ஒரு கனவாகவே இருந்து வருகின்றது. பெரும்பாலும் தோட்டங்களில் நூலகங்கள் காணப்படுவதில்லை. இது ஒரு கலாசாரமாக வளர்ந்து வரவில்லை.
இன்றைய சூழலில் வாசிப்பு என்பது மொத்த சமூக அமைப்பிலிருந்தும் மறைந்து போய்க் கொண்டிருக்கின்ற ஒரு விடயமாகும். இந்தப் பின்னணியில் நடமாடும் நூலகம் என்ற வேலைத் திட்டத்தை மனித அபிவிருத்தி ஸ்தாபனம் மற்றும் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி என்பவை இணைந்து ஆரம்பித்ருக்கின்ற மை வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயலாற்றுகை குழு உறுப்பினரும், பெருந்தோட்ட அமைச்சின் ஆலோசகருமான கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.
நடமாடும் நூலகம் வேலைத் திட்டம் கண்டி, ஹந்தானை தோட்டத்தில் அண்மையில் மனித அபிவிருத்தி தாபன பணிப்பாளர் திருமதி பி லோகேஸ்வரி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் பேராதனை பல்கலைக்கழக பிரதான நூலகர் கலாநிதி மகேஸ்வரன், மாவட்ட செயலக பணிப்பாளர், கல்வி பணிப்பாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் என்போர் பங்குபற்றியினர்.
தொடர்ந்து கலாநிதி சிவப்பிரகாசம் கருத்து தெரிவிக்கும் போது:
புத்தக வாசிப்பு என்பது மனிதனின் அறிவு கூர்மைக்கும், அறிவு வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் முக்கியமான திறவு கோள் ஆகும். அந்த நிலைமையானது மலையகப் பிள்ளைகளுக்கு மறுக்கப்பட்டுவந்த ஒரு சூழ்நிலையை கடந்த பல தசாப்தங்களாக நாம் அனுபவித்து வருகின்றோம்.
எனவே தான் பெருந்தோட்டங்களில் வாழும் பிள்ளைகளும் நூல்களை வாசிப்பதற்கும், நவீன தொழில்நுட்ப பயன்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கும், ஒரு வழியாக நடமாடும் நூலகங்கள் என்ற எண்ணக் கருவை மனித அபிவிருத்தி தாபனம் அறிமுகப்படுத்தியுள்ளமை மலையக வரலாற்றில் ஒரு புரட்சிகரமான வேலைத்திட்டம் ஆகும்.
இந்த நடமாடும் நூலக வேலைத்திட்டத்தை மனித அபிவிருத்தி தாபனமும், பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியும் இணைந்து, பிரான்ஸ் பெண்கள் குழு உதவியுடன் செயல்படுத்தி வருவது மிக வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.
சமூக மாற்றம் குறித்து பேசுகின்ற சிவில் சமூக அமைப்புகள் இம்மாதிரியான முற்போக்கு வேலை திட்டங்களை, மாற்றம் கொண்டுவரக்கூடியவேலை திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாகவே மலையகத்திலே மாற்றங்களை கொண்டு வர முடியும்
இந்த நடமாடும் நூலகம் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்திலே தொண்டர்கள் ஊடாக தோட்டங்களுக்கு சுமந்து சென்று செயல்படுத்தப்பட்டது. இதை மேலும் விருத்தி செய்யும் முகமாக முச்சக்கர வண்டிகளின் ஊடாக மிகத் தொலைவில் உள்ள தோட்டங்களுக்கும் புத்தகங்கள் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் என்பவற்றை கொண்டு சென்று தோட்டங்களிலேயே வாழுகின்ற சிறுவர்களுக்கு வழங்குவதன் ஊடாக அவர்களின் வாசிப்பு திறன், அறிவுத்திறன், புதிய விடயங்களை பெற்றுக் கொள்ளும் வியூகம் என்பவற்றை வளர்க்கும் ஒரு வேலை திட்டமாகும்.
இதன் ஊடாக மிகத் தொலைவில் உள்ள பல தோட்டங்களுக்கும் சிறிய நூலகம் போல் வடிவமைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் புத்தகங்களைச் சுமந்து சென்று சிறுவர்களுக்கு வழங்குவதற்கான ஒரு வேலைத் திட்டத்தை கொண்டுள்ளதாக மனித அபிவிருத்தி தாபனம் மற்றும் பெண்கள் ஒத்துழைப்பு முன்னணி உறுப்பினர்கள் குறிப்பிட்டவை பாராட்டப்பட வேண்டிய ஒரு புதிய மாற்றமான நிகழ்ச்சித் திட்டம் என்பதில் ஐயமில்லை.
பன்விலை நிருபர் ம. நவநீதன்



