மலையக நட்சத்திரக் கலைப் பேரவை இரங்கல்
மாத்தளை வடிவேலன் மறைவு இலங்கை தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும் என்று மலையக நட்சத்திரக் கலைப் பேரவை விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.
மாத்தளை வடிவேலன் மறைவு மலையக சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்றும் பேரவையின் செயலாளர் மருதமுத்து நவநீதன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது இரங்கற்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
தலை சிறந்த பேச்சாளரான மாத்தளை வடிவேலன் சிறுகதைகள் மலையக மக்களின் அவலம் தோய்ந்த வரலாற்றை யதார்த்தமாக வெளிப்படுத்திவையாகும். மறைந்தாலும் மலையக மக்கள் மத்தியில் வாழ்வார். இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றியுள்ள மாத்தளை வடிவேலன் தன் இலக்கியத் திறமையால் கடல் கடந்தும் அறியப்பட்ட ஓர் எழுத்தாளராவார். மாத்தளை வடிவேலன் கட்ந்த 1990 .1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பபில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் கலாசார உத்தியோகத்தராகக் கடமையாற்றினார் என்பதை நாம் அறிவோம். அவர் மலையக மக்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற ஏக்கத்தில் யாரால் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கை மலையகத்திற்கு அழைத்துவரப்பட்டார்களோ அவர்கள் மூலமாகவே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இந்தியா பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் தொடர்பு கொண்டு ஒரு தீர்வைக் காண வேண்டும் எனத் திட்டமிட் டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல எண்ணம் கொண்ட அன்பான பண்பான இவரின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மாத்தளை வடிவேலன் நேற்று (10) மாலை காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை வடக்கு மாத்தளையிலுள்ள இல்லத்தில் ( நோர்த் மாத்தளை வைத்தியசாலை சந்தியில் உள்ள அவரது இல்லத்தில்) வியாழக்கிழமை (12) பிற்பகல் நடைபெறவுள்ளதுடன் தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு மாத்தளை மந்தண்டாவலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
