விவசாயிகளுக்கு நஷ்டம் இருக்கிறது, பிரச்சினை இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண குறைந்தது இரண்டு வருடங்களாவது தேவைப்படும் என்பதை நேரடியாகவும் தெளிவாகவும் கூறுவதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி , நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த தெரிவித்திருக்கிறார்.
காணி அமைச்சில் நேற்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘ஈரப்பதன் கொண்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு தேசிய நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு இல்லாததாலும் ஒரே நேரத்தில் நெல் உற்பத்தி கிடைப்பதாலும் தனியார் துறையினர் ஈரப்பதன் கொண்ட நெல்லை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்கிறார்கள்.
இந்த விடயத்தில் பிரச்சினை இருக்கிறது. 8085 ரூபாவுக்கு கொள்வனவு செய்கிறார்கள். ஒருசில பகுதிகளில் 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. வடக்கு – கிழக்கு பகுதிகளில் மிகவும் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படுகிறது. அதனால் விவசாயிகள் நஷ்டத்தையே சந்திக்கிறார்கள். பிரச்சினை இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
