இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவற்படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று அகில இலங்கை நெடுநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தாவிட்டால், தாம் மீன்பிடித் தொழிலைக் கைவிட வேண்டிய நிலை உருவாகும் என்று அகில இலங்கை நெடுநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டிரோன் மெண்டில் தெரிவித்துள்ளார்.
வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்று சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக்கொண்டு திரும்பி வருந்துகொண்டிருக்கையில், இந்திய கடலோரக் காவற்படையினர் கடந்த 29ஆம் திகதி 12 மீனவர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியதாகத் திரு மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
அவர்களில் நால்வர் கடற்படையினரின் படகில் அழைத்து வரப்பட்டுக் காலி கராப்பிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏனைய மீனவர்கள் தமது படகு மூலம் இன்று வென்னப்புவ திரும்பியதாகவும் டிரோன் மெண்டிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
