அனர்த்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்பதற்காக மேலும் 500 பில்லியன் ரூபாய் (50 ஆயிரம் கோடி) மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான போதிய பண இருப்புகள் அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“வரும் ஆண்டிற்கான மூலதனச் செலவாக 1,400 பில்லியன் ரூபாவை நாம் ஒதுக்கியுள்ளோம். வீதிகள் மற்றும் வைத்தியசாலைகள் அமைப்பது போன்றவற்றுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூறாவளியால் ஏற்பட்ட சேதத்திற்கு நிதியை மீள ஒதுக்குவதற்குப் பணம் உள்ளது. எனவே புதிதாகப் பணம் தேவைப்படும் என்று நான் நம்பவில்லை.
ஆனால், வீடுகளைச் சுத்தம் செய்வது போன்ற அன்றாடச் செலவுகள் உள்ளன. அதற்குச் சுமார் 500 பில்லியன் ரூபா அதிகமாகச் செலவாகும். அதைத் தாங்கிக்கொள்ள முடியும். ஆரம்பச் செலவாக 13% மட்டுமே செலவிட முடியும் என்ற IMF நிபந்தனை உள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை காரணமாக, அதற்கும் அதிகமாகச் செலவிட எமக்கு ஒருவித சுதந்திரம் உள்ளது. மற்றொன்று, அரசாங்கத்தின் வங்கிக் கணக்கில் ஒரு ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகப் பணம் உள்ளது.”
‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை ஒரு சட்டரீதியான நிதியமாக பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
