புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டின், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (15) அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
இதன்போது ‘டிட்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கனடா நாட்டின் அனுதாபங்களைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கைக்கு மேலும் ஆதரவை வழங்கக் கனடா தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
மீட்பு மற்றும் உடனடி நிவாரண நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அனர்த்தத்திற்குப் பின்னரான இரண்டாம் கட்டத்தை இலங்கை தற்போது அடைந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், கனடா உள்ளிட்ட சர்வதேச சமூகம் வழங்கிய உதவிக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பெரும்பாலான பாடசாலைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் பாடசாலைகளை இன்று (16) முதல் மீண்டும் திறக்கத் தீர்மானிக்கப்பட்டதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். இயல்பு நிலைக்குத் திரும்புவதன் முக்கியத்துவத்தையும், பொருத்தமான இடங்களில் நிவாரண மையங்களைப் படிப்படியாகக் குறைப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
