சபரிமலை ஆன்மிகப் பயணத்தில் பக்தர்கள் சிரமமின்றியும் கூட்ட நெரிசலில் சிக்காமலும் சாமி தரிசனம் செய்வதற்கு திருவிதாங்கூர் ஆலய வாரியமும் மற்றும் பத்தினம்திட்டா காவல்துறையும் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அவ்வகையில், இணையம் வழி பதிவு செய்து வருகை தரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக, உடனடிப் பதிவு (ஸ்பாட் புக்கிங்) எண்ணிக்கை 5,000 ஆகக் குறைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்ததால் கடந்த வாரத்தில் சன்னிதானம், பம்பை மட்டுமின்றி மலைப்பாதையிலும் கூட்ட நெரிசல் எற்பட்டது. நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்குவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது. மேலும் பம்பை உள்ளிட்ட மூன்று இடங்களில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன.
ஆலய வாரியத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் உடனடி முன்பதிவு மூலமாகச் சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலும் இல்லை. உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) எண்ணிக்கையை பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல் அதிகரித்துக்கொள்ள ஆலய வாரியத்திற்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனால் பக்தர்கள் வருகைக்குத் தகுந்தாற்போல் ‘ஸ்பாட் புக்கிங்’ மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கும் நடைமுறை செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்துள்ளது.
………………
என்னை மிகவும் பாதித்த படம்: கிரித்தி சனோன்
இந்தியில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் தன் மனத்தை மிகவும் பாதித்துள்ளதாக அதன் நாயகி கிரித்தி சனோன் தெரிவித்துள்ளார். இதனால் அப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல் முறையாக தனுஷுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளார் கிரித்தி சனோன். இது தொடர்பாக அண்மையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
“என் திரைப்பயணத்தில் உடல், மன ரீதியாக அதிகம் பாதித்த படம் இது. எனது கதாபாத்திரம் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது. அதனால் மனத்தளவில் பாதிப்பு ஏற்படுத்தியது.
“படப்பிடிப்பு முடிவடைந்து பல வாரங்களுக்குப் பிறகும் அப்பாத்திரத்தின் தாக்கம் என்னுள் நீடித்தது,” என்று கிரித்தி சனோன் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) இப்படம் வெளியாக உள்ள நிலையில், தனுஷ் ஓர் அசாதாரண நடிகர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
ஒரே சமயத்தில் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
…
