கிழக்கு மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் முதலாவது வருட நிறைவு விழா இன்று (19) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகப் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து சிறப்பித்தார்.
பக்தி என்பது இன்று வியாபாரமாக மாறியிருக்கிறது என்று பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் இந்த விழாவில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
உண்மையாக இந்த ஐயப்பன் யார், எதைச் சொல்லுகின்றது, இந்த விரதம் என்னத்தைச் சொல்லுகின்றது என்பதை நாங்கள் உணர வேண்டும். உள்ளத் தூய்மையோடு மனதை, உடலை, சிந்தையை நாங்கள் தூய்மைப்படுத்த வேண்டும். ஆனால் இன்று பக்தி என்பது வியாபாரமாக மாறியிருக்கிறது. அது நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
கிழக்கு மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் முதலாவது வருட நிறைவையொட்டி மாபெரும் ஐயப்ப மாநாடும் சர்வமத சங்கமமும் இன்று (19.09.2026) செங்கலடி வசந்தம் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,கலந்துகொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்
சும்மா பார்ப்பதற்கு நானும் மாலை போடுகிறேன் என்று போய்விட்டு வந்தால் எந்த மாற்றமும் வாழ்க்கையில் ஏற்படப்போவதில்லை.
உண்மையான மதப்பற்று, ஆன்மீகத்தை நாங்கள் மனத்திலே உணர்ந்து செயல்பட வேண்டும்.
அதைப் பிறர் பார்ப்பதற்காகவோ காட்சிப் பொருளாகவோ மாற்றக்கூடாது.
இன்று சில ஆலயங்களில் நடக்கின்ற திருவிழாக்களைப் பார்க்கின்ற பொழுது, எங்களுக்கென்று ஒரு கலை, கலாசாரம் தனித்துவமாக இருக்கிறது. இன்று நவீனம் என்ற போர்வையிலே அதை நாங்களே அழித்துக்கொண்டிருக்கிறோம்.
திருவிழாக்களில் எவ்வளவு கலை, கலாசாரம், உலகம் போற்றும் அழகு இருக்கிறது. அதையே அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்லாமல் இடையிலே புகுந்த மூன்றாம் தர கலாசாரத்தை கொண்டுவந்து சீரழித்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே ஆலயங்கள் அதற்கு கட்டுப்பாடுகள் வைக்க வேண்டும்.
ஆலயங்கள் எங்களுடைய கலாசாரத்தின் காவலனாக இருக்க வேண்டும் என்றார்.
