வேலை வாய்ப்பை அரசியல் சாதனமாக அரசு பயன்படுத்துகிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு வந்த பொதுத் தேர்தல் சமயத்திலும் தொழில்களைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அமைச்சுப் பதவிகளைப் பெற்றதன் பிற்பாடு தொழில்களைப் பெற்றுத் தருவோம் என்று தற்போதைய ஆளும் தரப்பினர் கூறிய ஆடியோ பதிவுகள், வீடியோ பதிவுகள் உட்பட அனைத்து ஆதாரங்களும் எம்மிடம் காணப்படுகின்றன.
தற்போதைய அரசாங்கம் பட்டதாரிகளின் வேலையில்லா நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மாவட்ட மட்டத்தில் அமைப்புகளை நிறுவி, அந்த அமைப்புகளின் தலைவர்களுக்கு மாத்திரம் நியமனங்களைப் பெற்றுக் கொடுத்து, ஏனைய பட்டதாரிகளை கைவிட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், தற்போதைய ஜனாதிபதி, தான் ஆட்சிக்கு வந்ததும் நமது நாட்டில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்தார். இந்த வாக்குறுதி வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் கொள்கை அறிக்கையின் 72 ஆவது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், 20,000 பேரை ஆசிரியர் தொழிலுக்கும், 3,000 STEM பட்டதாரிகள் மற்றும் 9,000 STEM அல்லாத பட்டதாரிகள் தகவல் தொழிநுட்ப துறையிலும், மேலும் 3000 பேர் ஏனைய துறைகளிலும், சுங்கத் திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றில் 3,000 தொழில்களைப் பெற்றுத் தருவோம் என வழங்கிய வாக்குறுதிகளை தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் இரு வரவு செலவுத் திட்டங்களிலும் மீறி, இதை மறந்து செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு பொய் சொல்லி, பட்டதாரிகளை ஏமாற்றியது ஏன்? வேலையில்லாப் பட்டதாரிகளை அலைக்கழித்தது ஏன் என்றும் இங்கு கேள்வி எழுப்பினார்.
வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி முன்வைக்கும்போது, வேலையற்ற பட்டதாரிகளை மீண்டும் ஏமாற்றியமை தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
