இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை கீழ் இறத்கங்க பிரிவில் உயிரிழந்த மோகன்ராஜ் பேபி ஷானி என்ற 20 வயது யுவதியின் சடலம் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
கீழ் இறத்கங்க பிரிவு தோட்ட பொது மயானத்தில் பேபி ஷானியின் பூதவுடல் இன்று (18) பிற்பகல் மூன்று மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
யுவதியின் மரணம் தொடர்பாகப் பொலிஸார் தொடர்ந்து தீவர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் கைதான இளைஞன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
தோட்ட மக்கள் மத்தியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணும் வகையில் இன்றைய தினம் சமாதானக் கலந்துரையாடல் ஒன்றைப் பொலிஸார் நடத்தினர்.
கல்லேல்ல விகாரையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் உயரதிகாரிகள், தோட்ட அத்தியட்சகர்கள், சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்கள், தோட்டத் தொழிற்சங்கக் கிளைத் தலைவர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.
விசேடமாக வேவல்கட்டி, கீழ் இறத்கங்க தோட்டங்களின் பொதுமக்கள் பிரதிநிதிகள், உயிழந்த யுவதியின் தரப்பினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சந்தேக நபரான இளைஞன் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் கீழ் இறத்கங்க பிரிவினருக்கும் வேவல்கட்டி பிரிவினருக்குமிடையில் சுமுக உறவை நிலைநிறுத்தும் வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் பேபி ஷானியை அழைத்துச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் நீர்த் தேக்கப் பகுதியில் யுவதி தவறி வீழ்ந்தபோது அவரைக் காப்பாற்றப் போராடியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், பேபி ஷானிக்கு உண்மையாக நேர்ந்தது என்ன என்பதை அறிய தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படுவதால், அமைதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.
ஹப்புகஸ்தன்னையிலிருந்து ஜே. லக்ஷ்மிதாசன்
