பெண் பிள்ளை கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்தப் பிள்ளையின் தாயும் துணைவனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கண்டி வத்துகாமம் பகுதியில் நான்கு வயது பெண் பிள்ளையொன்று கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பிள்ளையின் தாயும் தாயின் காதல் துணைவனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த இணையர் (ஜோடி) இன்று (14) ஹாலிஎலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தப் பிள்ளை அடையாளம் தெரியாத சிலரால் பச்சை நிற ஓட்டோவில் கண்டி வத்துகாமத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கைவிடப்பட்டார்.
ஊரவர்கள் பொலிஸுக்கு அறிவித்துப் பிள்ளை மீட்கப்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டது.
பொலிஸார் விசாரணையை முடுக்கிவிட்டிருந்த நிலையில், இந்தக் காதல் ஜோடி இன்று அகப்பட்டுக்கொண்டது. அதே பச்சை நிற ஒட்டோவில் இவர்கள் பயணித்தபோது பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டனர்.
இந்த ஜோடி போதைப்பொருளுக்கு அடிமையானது என விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், பிள்ளையின் தந்தை வேலைத்தளத்தில் இருந்து திரும்பி, கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகளைப் பார்வையிட்டுள்ளார்.
தான் தங்கியிருந்து கூலி வேலை செய்வதாகவும் அப்போதே தனது மனைவிக்கும் அந்த நபருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் கணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அச்சிறுமியின் உடலில் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கான காயங்கள், அடையாளங்கள் காணப்படுவதால், இது குறித்த விரிவான மருத்துவ அறிக்கையைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கௌசல்யா
