பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிரான தன்மையையும் விழிப்புணர்வையும் நமது மக்கள் கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் செயலாற்றுகைக் குழு உறுப்பினரும்,கண்டி மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
ஹட்டன் கொட்டகலை கிளங்கன் வைத்தியசாலையில் இறந்து போன இளம் பெண் ஒருவரின் சடலத்தின் மீது பாலியல் கொடுமை செய்யப்பட்டதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்தச் சம்பவம் உண்மை தன்மை கொண்டதாகக் காணப்படின், அது சம்பந்தமாக பூரண விசாரணை செய்து குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் திரு. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
இந்த விடயம் சம்பந்தமாக சுகாதார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, வைத்தியசாலை பணிப்பாளருக்கும், காவல்துறையினருக்கும் பணிப்புரை வழங்கி இருக்கின்றது
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாக இருக்கின்றது.
அரசியல் மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்து மாற்றங்களும் ஏற்பட்டுவிடும் என்று கூறுவதை விட, சகல துறைகளிலும் அவ்வாறான மாற்றங்கள் உறுதி செய்யப்படுவதற்கும் சட்ட ஆட்சியும் மனித மாண்பும் உயர்ந்து நிற்பதற்கும், ஒவ்வொரு பிரஜையும் செயல்பட வேண்டும் என்பது முக்கியமான விடயமாகும்.
இந்த அடிப்படையில் இந்தக் கொடுமை குறித்து மக்கள் விழிப்பாக இருப்பதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். என்றும் சிவப்பிரகாசம் மேலும் சொன்னார்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
