சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு பிளைடுபாய் விமானிக்கு இஸ்ரேலிய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
விமானத்தை வீழ்த்தும் முயற்சியைத் தடுத்து 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை, அடுத்த ஆண்டு இஸ்ரேலில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபச் சுடரை ஏற்றுமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
டுபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானத்தில், 34,000 அடி உயரத்தில் வைத்து துணை விமானி ஒருவர் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை கோடரியால் தாக்கியதுடன், விமானத்தை ஆபத்தான முறையில் கீழ்நோக்கி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையாக காயமடைந்த நிலையிலும் துணை விமானியை எதிர்த்து போராடிய மச்சார், விமானி அறையின் கதவைத் திறந்ததையடுத்து பயணிகள் உள்ளே சென்று தாக்குதல் நடத்திய துணை விமானியை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பின்னர் விமானம் சவூதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மச்சாருடன் தொலைபேசியில் உரையாடிய நெதன்யாகு, அவரது துணிச்சலைப் பாராட்டியதுடன், இஸ்ரேல், இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும் அவர் ஒரு நாயகன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கமாக இஸ்ரேலிய குடிமக்களுக்கு வழங்கப்படும் சுதந்திர தின தீபச் சுடர் ஏற்றும் கௌரவத்தை இந்த முறை மச்சாருக்கு வழங்க விரும்புவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து விழாவில் பங்கேற்குமாறும் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
