தலவாக்கலை பிலிக்கண்டாமலை (C W M ) தோட்டமக்கள் இன்று காலை 11 மணியளவில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இந்த வருடம் புதிய அரசாங்கத்தின் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் 2.5 கி.மீ தூரத்தைக்கொண்ட பகுதிக்கு 6.8 கோடி ரூபா செலவில் காப்பட் வீதி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 50 வருடங்களுக்கு மேல் இந்தத் தோட்டத்திற்கு என ஒழுங்கான ஒரு பாதை இல்லாததன் காரணமாக இத்தோட்டத்தில் வாழும் 50இற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 பேர் பல்வேறு சிரமங்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
ஆனால் இந்த வீதியை முழுமையாக செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக இன்றைய தினம் தோட்ட மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை செய்தனர்.
தோட்டத்தின் உரிமையாளர் தோட்டத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக கனரக வாகனங்களை பயன்படுத்தி வருவதன் காரணமாக குறிப்பிட்ட 450 m தூரத்திற்கு காப்பட் இடுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரியதன் காரணத்தினாலேயே இந்த பிரச்சனை எழுந்துள்ளது.
கடந்த 50 வருடங்களுக்கு மேல் இத்தோட்ட மக்கள் அனுபவித்த துயரிலிருந்து மீண்டு எழுவதற்காக கிடைத்துள்ள இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே தமது ஆதங்கத்தை இன்று வெளிப்படுத்தினர்.
மேலும் வீதி அபிவிருத்தி பணி ஆரம்பிப்பதற்கு முன்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அரச அதிகாரிகள் ஸ்தலத்திற்கு வருகை தந்து தேவையான அனைத்து விடயங்களையும் சேகரித்து சென்ற பிறகு அபிவிருத்தி பணி ஆரம்பிக்கப்பட்டது.
பணி நிறைவு பெறும் இந்த வேளையில் எஞ்சிய 400 – 500m தூரத்தை மாத்திரம் அபிவிருத்தி செய்யாமல் கைவிடும் நிலை ஏற்பட்டதன் காரணமாகவே மக்கள் கிளர்ந்து எழும்பினர்.
இந்த பிரச்சனை தோட்ட உரிமையாளருக்கோ அல்லது வேறு எந்த ஒரு தரப்பினருக்கோ எதிரானது அல்ல என்றும் தமது அடிப்படை பிரச்சனையான போக்குவரத்து பாதை மற்றும் சுத்தமான குடிநீர் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கௌசல்யா






