தைப்பொங்கல் பண்டிகையின் தேசிய கொண்டாட்டம் இன்று (15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்த தைப்பொங்கல் விழாவை பிரதமர் அலுவலகம், புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்வில் பிரதமர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரின் தலைமையில் தைப் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இந்த விழாவில் இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியை முன்வைத்து கருத்துத் தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ,
“இந்த நிகழ்வு தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான கொண்டாட்ட நிகழ்வு. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல துறைகளின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தைப் பொங்கல் கொண்டாட்டம் நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த தைப் பொங்கல் தினத்தில், இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப பாடுபடும் அனைத்து இலங்கையர்களுக்கும், உலக மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இவ்வருட தைப் பொங்கல் தினத்தில், ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒவ்வொரு சமூகத்தின் கலாசார மற்றும் மத உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில் ஒரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் செயற்பட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டார்.
தைப் பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கிய சாரமாக விளங்குவது, பொறுமை மற்றும் சூழல் மீதான மரியாதை ஆகிய முக்கிய பண்புகளுடன், ஒரு நாடாக முன்னேறுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நாடு புதியதோர் யுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொள்கை மற்றும் மனப்பான்மை சீர்திருத்தங்கள் மூலம் நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இது சவாலானது என்றாலும், அது ஒரு அத்தியாவசிய பணி என்றும் பிரதமர் கூறினார்.
“தைப் பொங்கல் பண்டிகை, ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும், இயற்கையுடனான நமது தொடர்பையும், நமது அன்றாட வாழ்வில் நன்றியுடன் இருப்பதன் மதிப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது. இன்று இந்த தேசிய தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து இந்து சமூகத்திற்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர் மற்றும் இந்து சமயத் தலைவர்கள் உட்பட சர்மத தலைவர்கள், அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், சிறப்பு அதிதிகள், இந்து பக்தர்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
