நோர்வூட் பிரதேச செயலகத்தை நிரந்தரமாக அட்டனுக்கு மாற்ற சதி முயற்சியா ? என்று -முன்னாள் பிரதேச சபைத் தலைவர் குழந்தைவேல் ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பெருந்தோட்ட மக்களின் வசதி கருதி நோர்வூட்டில் உருவாக்கப்பட்ட பிரதேச செயலகத்தை உத்தியோகத்தர்களின் போக்குவரத்து வசதிக்காக அட்டனுக்கு இடம் மாற்ற சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்ட முயற்சி தோல்வி கண்டிருந்தது.
இந்த நிலையில் இப்போது மழையைக் காரணம் காட்டி அட்டனில் அமைக்கப்பட்டுள்ளமை அங்கு நிரந்தரமாக அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் சதி முயற்சியா என முன்னாள் பிரதேச சபைத் தலைவரும் இந்நாள் உறுப்பினருமான கே. குழந்தைவேல் ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணீர், பொகவந்தலாவ, நோர்வூட், புளியாவத்தை, டிக்கோயா, அட்டன் பிரதேச மக்கள் தங்கள் தேவைகளுக்காக கினிகத்தேனையில் அமைந்திருந்த பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்துக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தார்கள்.
இதைக் கருத்திற் கொண்டு 2015 இல் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, அக்கரபத்தனை, நோர்வூட் மஸ்கெலியா ஆகிய நான்கு பிரதேச சபைகள் புதிதாக உருவாக்கப்பட்டன.
அதேபோல், தலவாக்கலை, நோர்வூட், முதலான நான்கு பிரதேச செயலகங்களும் ஏற்படுத்தப்பட்டன. எனினும், நோர்வூட் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்த உயர் மட்டத்தில் விருப்பம் இருந்ததாகத் தெரியவில்லை.
உப செயலகமாக 2021-2023 வரை தியசிரிகமவில் இயங்கி வந்தது. இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அமைச்சராக இருந்த போது நோர்வூட் பிரதேச செயலகமாக தரமுயர்த்தி 2023-2025 வரை தியசிரிகமவில் இயங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் நோர்வூட் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தமது போக்குவரத்து வசதியைக் கருத்திற் கொண்டு நோர்வூட் பிரதேச செயலகத்தை அட்டன் புகையிரத நிலைய வளாகக் கட்டிடத்தில்அமைப்பதற்கு முயற்சிகள் மேகொள்ளப்பட்டிருந்தன.
நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் பாராளுமன்றத்திலும் இது தொடர்பாகக் கதைத்ததைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
இருந்தும், கடந்த மாதக் கடைசியில் பெய்த பலத்த மழையின் போது, நோர்வூட் பிரதேச சபை செயலகத்துக்குள் வெள்ளம் வந்து விட்டதாகவும், தம்மால் அங்கு கடமையாற்ற முடியாது என்றும் அங்குள்ள உத்தியோகத்தர்கள் ஆட்சேபனை தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள்.
அதற்கு ஆதரவாக அன்றைய தினம் அங்கு சென்றிருந்த பொது மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதைக் காரணம் காட்டி உடனடியாக நோர்வூட் பிரதேச செயலகம் அட்டன் புகையிரத நிலையத்துக்கு மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருகின்றது.
ஏற்கனவே பிரதேச செயலகத்தை அட்டனுக்கு மாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி கண்ட போதிலும், இப்போது மழையைக் காரணம் காட்டி மாற்றப்பட்டுள்ளமை பொது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், மஸ்கெலியா ராஜமாலை, நல்லதண்ணீர், பொகவந்தலவ லொய்னோன் முதலான இடங்களிலிருந்து இலகுவாக தியசிரி கமவுக்கு வந்த மக்கள் மேலும் 10 கிலோ மீற்ற தூரம் பயணித்து, நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து அட்டன் நகருக்கு வந்து மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
பிரதேச செயலகம் என்பது பொது மக்களின் தேவைக்கா அல்லது அங்கு கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களின் வசதிக்கா என்ற கேள்வி எழுகிறது.
அத்தோடு, அட்டன் நகருக்கு மாற்றப்பட்டுள்ள செயலகக் கட்டடத்துக்கு மாதாந்தம் வாடகை செலுத்துவதற்கு பெருந் தொகையான பணத்தையும் செலவிட வேண்டியுள்ளது.
ஜனாதிபதி வீண் விரயங்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்ற நேரத்தில் இத்தகைய மேலதிக செலவுக்கு மகளின் வரிப்பணத்தை செலவிடாமல், அந்தப் பணத்தைக் கொண்டு முன்பு இருந்த கட்டடத்தில் திருத்தப் பணிகளை மேற்கொண்டு மழைக் காலத்தில் ஒழுகாமல் இருக்க வசதி செய்து கொடுக்க முடியாதா?
அதை விடுத்து அட்டனில் செயலகத்தை தற்காலிகமாக அமைத்துள்ளதாகக் கூறப்படுவது, அங்கு நிரந்தரமாக நிறுவுவதற்கு மறைமுகமாக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியாகவே இதை எண்ணத் தோன்றுகிறது.
அண்மையில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நோர்வூட் பிரதேச செயலகத்துக்கு அசுவெசும உட்பட தமது தேவைகளுக்காக வந்து போக வேண்டியுள்ளதால் மீண்டும் நோர்வூட் செயலகத்தை தியசிரிகம பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
( மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்)
