கண்டி பன்விலை நெல்லிமலை தோட்டப் பாதையில் அமைந்துள்ள இந்தப் பாலம் அண்மையில் பெய்த கடும் மழையினால் சேதமடைந்துள்ளது.
இதனால் நெல்லிமலை தோட்டத்திலிருந்து தமது அன்றாட வேலைகள் நிமித்தம் பல்வேறு இடங்களை நோக்கிச் செல்லும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், மாணவர்கள் எனப் பலரும் அச்சத்துடனும் ஆபத்தான நிலையிலும் இந்த வீதியைக் கடக்கின்றனர்.
அப்பகுதியில் அமைந்துள்ள சிவனேஸ்வரா, அபிராமி ஆகிய பாடசாலை களுக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற் இந்தப் பாலத்தை உடனடியாக புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் அரச அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் தற்போது சீரான காலநிலை நிலவுகின்ற போதிலும், நெல்லிமலைப் பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக தித்துவா புயலின் பின்னர் ஏற்பட்ட கடும் மழை காரணமாக இப்பிரதேசம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனுடன், நெல்லிமலைப் பிரதேசத்தில் அரசாங்கத் தோட்டத்திற்குச் செல்லும் மற்றொரு பாலமும் தித்துவா புயலால் முழுமையாக சேதமடைந்திருந்தது. பின்னர் தோட்ட மக்களும் தோட்ட நிர்வாகமும் இணைந்து அதனை தற்காலிகமாகத் திருத்தியமைத்திருந்தனர்.
எனினும், அந்தப் பாலமும் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் மன அழுத்தத்திலும் ஏமாற்றத்திலும் உள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
