நுவரெலியா நகரப் பகுதியில், கார்லிபேக் சந்தியை அண்மித்த இடத்தில் ஏற்பட்டுள்ள நீர் வழித்தடத் தடையினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட தித்வா புயலின் போது இப் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், அதன் பின்னர் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், இப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால், மக்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.



இதுபற்றி மக்கள் பிரதிநிதிகளுக்குப் பல முறை முறையிட்டும் தீர்வு கிட்டவில்லை.
நுவரெலியா செல்லும் குறுக்கு வழியான ரதல்லை கார்லி பேக் சந்திப் பகுதியில் உள்ள ஆற்றில் ஒரு பகுதியில், அவ் வீதி செப்பனிடப்பட்ட வேளையில், அங்கு வெட்டப் பட்ட மண்ணைக் கொண்டு நிரப்பி,அப் பகுதியில் வர்த்தக நிலையங்கள் அமைக்க பட்டன.
இதனால், அந்த ஆறு குறுகியது.தற்போது பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்துத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிகளில் உட் புகுந்து பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்குக் காரணம் நீர் வழித்தடம் தடைப்பட்டுள்ளமையே.
இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர்
