நுவரெலியாவில் கட்டுக்கடங்காமல் சுற்றித் திரியும் வண்டிக்குதிரைகள் தொடர்பில் மாநகர சபை நிர்வாகம் உரிய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நுவரெலியாவில் வண்டிக் குதிரைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால், குதிரைகள் கட்டுப்பாடின்றிச் சுற்றித் திரிந்து வாகன விபத்துகளை ஏற்படுத்துகின்றன.
கடந்த 13 ஆம் திகதி வீதியில் துள்ளிக்குதித்த குதிரையொன்று, வாகனமொன்றில் மோதிக் கம்பீரமாய் எழுந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது.


குதிரை உரிமையாளர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநகர சபையும் குதிரைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவற்றின் உரிமையாளர்களும் மெத்தனப்போக்கில் செயற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
நுவரெலியா மாநகர வீதிகளில் கட்டுப்பாடின்றிச் சுற்றித் திரியும் குதிரைவண்டிக் குதிரைகள்,சுற்றுலாத்துறைக்காக பயன்படுத்தப்படும் குதிரைகள் தொடர்பில் முறையான கட்டுப்பாடுகளும் கண்காணிப்பும் இல்லாததால், வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 13ஆம் திகதி நுவரெலியா பகுதியில் வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த வாகனமொன்றின் ‘டாஷ்போர்ட்’ கெமராவில் பதிவான காட்சிகளில், திடீரென வீதிக்கு வந்த குதிரையொன்றினால் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது தனித்த ஒரு சம்பவம் அன்று எனத் தெரிவிக்கும் பிரதேச மக்கள், இதற்கு முன்னரும் நுவரெலியா நகரிலும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளிலும் குதிரைகள் திடீரென வீதிக்கு வந்ததன் காரணமாக பல விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர்.
இவ்வாறான விபத்துகளில் வாகனங்களுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டதுடன், சில சந்தர்ப்பங்களில் நபர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நுவரெலியா முக்கிய சுற்றுலா நகரமாக விளங்குவதால், சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்குக்காக குதிரைகள் பயன்படுத்தப்படுவது வழக்கமாகியுள்ளது. எனினும், இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுக்கப்படுவதற்குத் தெளிவான கட்டுப்பாட்டு முறைமை ஒன்று அவசியம் எனப் பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.
குதிரைகளின் உரிமையாளர்களுக்கும் இதில் முக்கியமான பொறுப்பு இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தமக்குச் சொந்தமான குதிரைகள் கட்டுப்பாடின்றி பொது வீதிகளுக்குள் நுழைவதைத் தடுப்பது, அவற்றை முறையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது, சுற்றுலா நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் வீதிப் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவற்றைக் கையாள்வது உரிமையாளர்களின் பொறுப்பாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, குதிரைகளில் சவாரி செய்யும் நபர்களுக்கும் வீதி சட்டங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு உள்ளதாகவும், வீதியில் பயணிக்கும் ஏனைய வாகனங்கள்,பாதசாரிகளுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் குதிரைகளைக் கட்டுப்பாட்டுடன் செலுத்த வேண்டும் எனவும் பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிலைமை தொடர்பில் நுவரெலியா மாநகர சபையும் மௌனம் காக்க முடியாது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பொதுச் சுகாதாரம், பொதுமக்களின் பாதுகாப்பு,நகரின் பொது வசதிகள் தொடர்பில் மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு அமைவாக, குதிரைகள் தொடர்பான இந்தப் பிரச்சினைக்கும் முறையான கட்டுப்பாடு,கண்காணிப்பு முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏற்கனவே பல விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் ஒரு பாரிய விபத்து ஏற்படும் வரை காத்திருக்காமல், நுவரெலியா மாநகரில் குதிரைகளைப் பயன்படுத்துவது, அவற்றின் நடமாட்டம் தொடர்பில் உடனடியானதும் நிலையானதுமான கட்டுப்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர். எப். எம். சுஹெல் – நுவரெலியா
