நாவலபிட்டி பழைய ரயில் பாதைக்கு அருகில் அமைந்திருந்த ஒரு வீட்டின் மீது (28) ஆம் திகதி காலை ஏற்பட்ட மண் சரிவில், அந்த வீட்டில் வசித்த இரு பெண்களும் மற்றும் மூன்று மாதச் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலபிட்டியப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையால் அந்த வீட்டின் பின் பகுதியில் இருந்த மண்மேடு இடிந்து வீடு முழுவதையும் மூடி புதைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம மக்கள் மற்றும் நாவலபிட்டிய பொலிஸ் அதிகாரிகள் இணைந்து குறித்த நபர்களை மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் மூவரையும் காப்பாற்ற முடியவில்லை.
உயிரிழந்தோரின் உடல்கள் நாவலபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
நாவலபிட்டிய பிரதேசத்தில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளதாக பிரதேச செயலாளர் ரம்யா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஹற்றன் க. கிஷாந்தன்

