விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் வழக்கு விசாரணை ஜன. 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால், பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் ரிலீஸ் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க இன்று காலை தனி நீதிபதி பி. டி. ஆஷா உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தணிக்கை சபை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று பிற்பகலில், இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தணிக்கை சபைசார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால் தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்ஸவா, நீதிபதி ஜி. அருள்முருகன் தலைமையிலான அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்ஸவா தலைமையிலான அமர்வு, படத்தை வெளியிடும் திகதியை நிர்ணயித்துவிட்டதால், தணிக்கைச் சான்றிதழ் பெற போலியான ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் பெறாமல், படத்தை வெளியிடும் திகதியை எவ்வாறு முடிவு செய்தீர்கள். பல்வேறு நடைமுறைகள் உள்ளபோது சான்றுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். ரிலீஸ் திகதியை அறிவித்துவிட்டீர்கள் என்பதற்காக உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
மேலும், ஜன நாயகன் படம் தொடர்பாக தணிக்கைசபை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தொடர்பான அடுத்த விசாரணை ஜன. 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் தர பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கவும் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
