சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் “மனிதநேய நெறிமுறைகளை நிலைநிறுத்துதல் மற்றும் நெருக்கடி காலங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் 2025 ஒக்டோபர் 19 முதல் 23 வரை நடைபெற்ற 151வது அனைத்துப் பாராளுமன்றங்களின் ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் கலந்துகொண்டனர்.
தொடர்ச்சியான உலகளாவிய மனிதாபிமான சவால்களின் பின்னணியில், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைப் பாதுகாத்தல், பல்தரப்பட்ட உறுதிப்பாடுகளை வலுப்படுத்தல், மற்றும் மோதல் மற்றும் நெருக்கடி காலங்களில் பயனுள்ள மனிதாபிமானப் பதிலளிப்பை உறுதிசெய்தல் என்பவற்றில் பாராளுமன்றங்களின் பங்கு குறித்து கலந்துரையாடும் வகையில் உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான சட்டவாக்க உறுப்பினர்களை இந்த மாநாடு ஒன்றிணைத்தது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ பிரதி அமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வட்டகல தலைமையில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஒஷானி உமங்கா, சாந்த பத்மகுமார, மொஹமட் பைசல், ஹேஷா விதானகே மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
